பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்குமா விரைவில் மின்ரயில்!பணிகள் தீவிரத்தால் எகிறும் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி;பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கல் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளதால், விரைவில் மின்சார ரயில்கள் இயக்கத்தை எதிர்பார்க்கலாம், என, ரயில்வே ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம், கடந்த, 2019ல் அறிவிக்கப்பட்டு, அந்தாண்டு இறுதியில் பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்தில், திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு (179 கி.மீ.,); பொள்ளாச்சி - போத்தனுார் (40 கி.மீ.,) ஆகியவை மின்மயமாக்கப்படுகின்றன.ஊரடங்கால் சிக்கல்இந்நிலையில், பணிகள் துவங்கிய சில மாதங்களில், கொரோனா பரவல் தீவிரமடைந்து, ஊரடங்கு அமலானதால், பணிகள் தொய்வடைந்தன. இதையடுத்து, பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து, பிற பகுதிகளில் ரயில்கள் இயங்கத் துவங்கிய பிறகும், எட்டு மாதங்களுக்கு பிறகு, தற்போது, அமிர்தா, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. மற்ற எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.இந்நிலையில், தொய்வடைந்திருந்த மின்மயமாக்கல் திட்ட பணிகள் கடந்த ஒரு மாதமாக சூடு பிடித்துள்ளது. இரு வாரங்களுக்கு முன், தெற்கு ரயில்வே மின்மயமாக்கல் முதன்மை இயக்குனர், வரும் பிப்., 10 முதல், பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில் மின்சாரம் பாயத்துவங்கும் என அறிவித்திருந்தார்.பணிகள் ஜரூர்அதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், போத்தனுாரில் இருந்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு, 100 அடி முன் வரை மின்கம்பங்கள் நடுவதற்கான குழிகள் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மின்கடத்திகள் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மின்மயமாக்கலுக்கான தளவாடங்கள், ஸ்டேஷன் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், அடுத்த மாத இறுதிக்குள், பொள்ளாச்சி - கோவை இடையே மின்சார ரயில்கள் இயங்க துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.மற்ற வழித்தடங்களில்...வரும், ஜூன், 10ம் தேதி முதல், பொள்ளாச்சி - கோவை வழித்தடத்திலும், செப்., 10ம் தேதி முதல், பொள்ளாச்சி - பாலக்காடு; பழநி - திண்டுக்கல் வழித்தடங்களிலும் மின்சாரம் பாயத்துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்தாண்டு இறுதிக்குள், பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டு, மின்சார ரயில்கள் இயங்கும் என ரயில்வே ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி;பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கல் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளதால், விரைவில் மின்சார ரயில்கள் இயக்கத்தை எதிர்பார்க்கலாம், என, ரயில்வே ஆர்வலர்கள் நம்பிக்கை ...
www.dinamalar.com