சூரியனே சரணம்! வேளாண் பல்கலையில் ஓராண்டுக்குள்50 சதவீத கட்டடத்தில் சோலார் பேனல்!
https://www.dinamalar.com/district_detail.asp?id=2501159
கோவை:'தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 50 சதவீத கட்டடங்களில் ஓராண்டுக்குள் சோலார் பேனல் அமைத்து ஆற்றல் உற்பத்தி செய்ய, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.வேளாண் பல்கலையில் 'வேளாண் ஆற்றல் திறன் மேம்பாடு' எனும் பெயரில், ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இதில், துணைவேந்தர் குமார் பேசியதாவது:இந்தியாவில் நகரமயமாக்கல், தொழிற்சாலைகளின் வளர்ச்சி காரணமாக, ஆற்றல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஆற்றல் சேமிப்பு மற்றும் குறைப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதல்கட்டமாக, மாணவர் விடுதிகளில், 'சோலார் லைட்' பொருத்தப்பட்டுள்ளது. பல்கலையின் அனைத்து கட்டடங்களிலும், சோலார் பேனல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர் வரும், ஓராண்டுக்குள், 50 சதவீத கட்டடங்களில், சோலார் பேனல் வாயிலாக மின் உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் கல்லுாரி டீன் ஸ்ரீதர், நீர்நுட்பவியல் மைய தலைவர் பன்னீர் செல்வம், விரிவாக்க கல்வி இயக்கக இயக்குனர் ஜவஹர்லால், பயிற்சி பிரிவு தலைவர் தியோடர் மற்றும், கோவை, சேலம், ஈரோடு,விழுப்புரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த, 350 விவசாயிகள் பங்கேற்றனர்.