ஈரோட்டில், ஈரோடு மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம், இந்திய கட்டுனர் சங்கம், ஒளிரும் ஈரோடு சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி - கட்டுமான மாநாடு', ஈரோடு மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் சண்முகன் தலைமையில் நடந்தது.
மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் பேசியதாவது: ஈரோட்டில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், மத்திய, மாநில அரசுகள் தலா, 500 கோடி ரூபாய், மக்கள் பங்களிப்பு மற்றும் மாநகராட்சி மூலம், மீதமுள்ள, 500 கோடி ரூபாய் பங்களிப்புடன், 1,543 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும். முதல் பணியாக, கழிவு நீர் மேலாண்மை மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கு, நகரை தூய்மையான, அழகானதாக்கும் திட்டம் வடிவமைக்கப்படும். அதற்காக பெரும்பள்ளம் ஓடையின், 15 கி.மீ., தூரத்தை முழுமையாக கான்கிரீட் தளம் கரை அமைத்து, சைக்கிள் செல்லும் பாதை, பூங்கா, விளையாட்டு திடல், அமரும் பகுதி, தரமான சாலை போன்றவை அமைக்கப்படும். ஓடையில் மழை நீர் மட்டும் செல்லும் வகையிலும், பிற கழிவு நீர் தனியாக கொண்டு சென்று, சுத்திகரிப்பு செய்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்படும். வ.உ.சி., பூங்கா, பஸ் ஸ்டாண்ட் நவீனமாக்கப்படும். ஈரோடு அரசு மருத்துவமனையுடன், பிற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு, அனைத்து நோயாளிகளின் விபரங்களும் இணைய வழி பதிவாக்கப்படும். இப்பணிகள் முடிந்த பிறகே, பிற திட்டப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்மார்ட் சிட்டிக்காக, வரைபடம் அமைக்கும், 'ஜியோக்னோ' நிறுவன வணிக மேம்பாட்டு அதிகாரி அன்புதேவநேயன் பேசியதாவது: லேடார் டெக்னாலஜி மூலம், நிலம், நீர் நிலை, ஆக்கிரமிப்பு பகுதி, கட்டடங்கள் என அளவிடப்படுகிறது. அரசு நிலம், நீர் நிலை, கட்டடம் என தனித்தனியாக பிரித்து, வரை படமாக்கி வழங்குவோம். அந்த அளவீட்டின்படி, ஆக்கிரமிப்பு அகற்றி, கட்டுமானம் அமைந்தால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாகும். இவ்வாறு அவர் பேசினார். ஒளிரும் ஈரோடு சின்னசாமி, பொறியாளர் மோகன்ராஜ், சுரேஷ்பாபு, செல்வசுந்தரம், ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் பேசினர்.