நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்க மதுரை நாராயணபுரத்தில் 25 அடிக்கு நகர்த்தப்பட்ட அம்மன் கோயில்
மதுரை நாராயணபுரத்தில் உள்ளது மந்தையம்மன் கோயில். பழமையான இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்கு முன் 5 ஆயிரம் சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. நத்தம் பிரதான சாலையை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. இந்த சாலையில் பறக்கும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெறுகிறது. இதில், கோயில் அமைந்துள்ள இடத்தில் 4 அடிக்கும் மேல் கையகப் படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலின் முக்கிய பகுதிகளை இடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோயிலை தற்போது இருக்கும் இடத்திலிருந்து 25 அடி நகர்த்தவும், 5 அடி உயர்த்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டிடத்தை நகர்த்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து பொறியாளர் ஏ.அன்பில்தர்மலிங்கம் கூறியது: கோயில் 65 அடி, நீள, அகலத்தில் உள்ளது. ஆய்வில் கட்டிடம் ஸ்திரத்தன்மையுடன் இருந்தது. கட்டிடத்தை 350 ஜாக்கிகளை பயன் படுத்தி 5 அடி உயர்த்தினோம். கட்டிடத்தை நகர்த்தும் முன் புதிய இடத்தில் வலுவான அடித்தளம் அமைத்தோம். தற்போது 150 பேரிங் ஜாக்கிகளை பயன்படுத்தி கட்டிட த்தை 25 அடிவரை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கியுள்ளோம். 3 நாட்களில் இப்பணி முடிவடையும். ஹரியாணா மாநில நிறுவனத்தின் துணையுடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
கட்டிடத்தை உயர்த்தவும், நகர்த்தவும் ரூ.13 லட்சம் ஆனது. இதர கட்டுமானப் பணிக்காக ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் செலவில் இப்பணியை மேற்கொள்ள 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன. இதுவே கோயிலை இடித்துவிட்டு கட்டினால் ரூ.1.50 கோடி ஆகும். மேலும் பணி முடிய 15 மாதங்கள் ஆகியிருக்கும். மதுரையில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றப்பட்ட கட்டிடங்களில் இக் கோயில் 7-வது கட்டிடமாகும். கோயில் என்ற அடிப்படையில் இதுவே முதல் கட்டிடம் என்றார்.
https://tamil.thehindu.com/tamilnadu/article26751853.ece