ரூ.25 லட்சம் மதிப்பில் வாகன காப்பகம் * களக்காட்டில் கனிமொழி எம்.பி., திறப்பு
களக்காடு:களக்காட்டில் கனிமொழி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு டவுன் பஞ்., தலைவர் பி.சி.ராஜன் தலைமை வகித்தார். நகர தி.மு.க., செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.பி.,க்கள் ஜெயதுரை, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்.எல்.ஏ., மைதீன்கான், களக்காடு சேர்மன் ஜார்ஜ் கோசல், முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு ஆகியோர் பேசினர்.
ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்து கனிமொழி எம்.பி.,பேசியதாவது:- கருணாநிதி இரவு பகல் பாராமல் எடுத்த காரியத்தை முடிக்க பாடுபடுவார். அதே போல் களக்காடு டவுன் பஞ்., தலைவர் பி.சி.ராஜனும் செயல்பட்டு கருணாநிதியின் உண்மை தொண்டனாக உள்ளார். களக்காடு மக்களுக்கு குடிநீர் கிடைக்க கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தர நிதி ஒதுக்கீடு செய்து தருவேன். வரும் பார்லி., தேர்தலில் 40 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நம்மை நம்பியுள்ள கட்சிகளுக்கு கலைஞர் ஒதுக்கும் சீட் தவிர்த்து மீதமுள்ள தொகுதிகள் அனைத்திலும் நின்று வெற்றி பெறுவோம். மற்ற கட்சி போல் வேண்டும் போது கூட்டணி மற்ற நேரத்தில் தூக்கி எறியும் பழக்கம் கலைஞருக்கு கிடையாது.
குடிக்க தண்ணீர் கிடையாது, மின்சாரம் இல்லை, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, யாருக்கும் மருத்துவ வசதி கிடையாது இது தான் அதிமுகவின் மூன்றாம் ஆண்டு சாதனை. மக்களுக்கு பயன்பெறக்கூடிய திட்டங்கள் அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதை அனைத்தையும் அ.தி.மு.க., அரசு முடக்கிவிட்டது. இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டும். பெண்கள் வீதிக்கு வந்து போராடினால் தான் மாற்றம் வரும். நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அநீதியை எதிர்த்து போராட வேண்டும். தி.மு.க., ஆட்சியில் கலைஞர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார். அ.தி.மு.க., அரசு எதையும் நிறைவேற்றவில்லை.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நெல்லை மாவட்டத்தில் 38 கொலைகள் நடந்துள்ளது. 20 நாட்களில் மட்டும் 13 கொலைகள் நடந்துள்ளது. இதை பார்க்கும்போது எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது. இதற்கு எல்லாம் வரப்போகும் தேர்தலில் மக்களாகிய நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
70ம் ஆண்டு தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ஜனாதிபதி பதவி கிடைக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது கலைஞர் எனது உயரம் எனக்கு தெரியும். தமிழ் மக்களை விட்டு நான் எங்கேயும் செல்ல மாட்டேன் என கூறினார். ஆனால் தற்போது அ.தி.மு.க., பொதுக்குழுவில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று பிரதமராக அம்மாவை உட்கார வைப்போம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் குடிக்க தண்ணீர் கிடையாது. மின்சாரம் கிடையாது, அம்மா பிரதமரானால் இந்தியா அளவில் குடிநீர் கிடைக்காது. தமிழ்நாடு முதல்வராக இருக்கும் ஜெயலலிதா கோடநாடு, போயஸ் கார்டனில் தான் இருப்பார். இவரை யாராலும் பார்க்க முடியாது. பிரதமரானால் ஜெ.,வெளிநாட்டில் சென்று ஓய்வு எடுக்க தங்கிவிடுவார். இந்திய பாராளுமன்றம் வெளிநாட்டில் செயல்படும் நிலை உருவாகும்.
ஜெ., முதல்வராக இருக்கும்போதே மக்களை சந்திப்பது கிடையாது. அப்படியே வந்தாலும் கண்ணாடி காருக்குள் இருந்து மக்கள் மூச்சே தன் மீது படாதவாறு பேசிவிட்டு செல்வார். ஜெ., ஆட்சியில் எந்த தொழில் வளர்ச்சியும் கிடையாது. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இருண்ட தமிழகத்தை இருளிலிருந்து மீட்க உதய‹ரியனால் மட்டும் தான் முடியும். கலைஞர் உங்களை நம்பியுள்ளார் ஆதரவு தருமாறு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் ஜான்சன்துரை, சித்திக், முத்துகிருஷ்ணன், கருணாகரன், வேலு, கவுன்சிலர்கள் அப்துல் மஜீத், சர்தார் அலி, நாகூர்கனி, ஜின்னா, தபால்துறை தொமுச மாநில தலைவர் நான்குநேரி ஆறுமுகம், கவுன்சிலர் கானாமுத்து, காமராஜ் உட்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
ஜின்னாதுரை நன்றி கூறினார். பின் கனிமொழி எம்.பி., களக்காடு சிதம்பராபுரம் கருணாகரன் இல்லத்திற்கு சென்று கருணாகரன் சகோதரி ஜான்சி, டாக்டர் அருள் ஆகியோர் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.