Important place in Tirunelveli
சங்கரன்கோவில்
சங்கர நயினார் கோவிலுக்கு வடக்கே ஒரு பஞ்சாலை இயங்குகிறது. இங்கு ஒரு வனஸ்பதி தொழிற்சாலையும் உள்ளது. சங்கரன் கோவில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் பல தீப்பெட்டி தொழிற்சாலைகளும், மூன்று மூட்டைபூச்சி ஒழிப்பு மருந்து செய்யும் நிறுவனங்களும், சோப்பு செய்யும் தொழிலகங்களும், பருத்தி அறைக்கும் ஆலைகளும் இங்கு இயங்குகின்றன. வாடிக்கோட்டை கிராமத்தில் ஒரு பஞ்சாலை உள்ளது.
இவ் வட்டம் மழை வளம் குறைந்தது. இங்கு சித்திரை பத்துக்கு மேல் ஆவணி, புரட்டாசி முடிய மேய்க்காற்று வீசும். சங்கர நாயனார் கோவிலில் சிவனும், பெருமாளும் 'சங்கர நாராயண' வடிவத்தில் வழிபடப்படுகின்றனர். இங்கு ஆடி மாதத்தில் உற்சவத்தின் போது 'மாட்டுத் தாவணி' நடைபெறும் சங்கர நாராயணார் கோவில் கி.பி.1022 இல் கட்டப்பபட்டது. இக்கோவில் கோபுரம் 125 அடி உயரமானது. புலித்தேவரால் அமைக்கப்பட்ட உட்கோவில் மர வேலைபாட்டைக் காணலாம்.
நாங்குனேரி
நெல்லை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ளது. நல்ல மழை பெறும் வட்டம். தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான 'வானமாமலை மடம்' இங்குள்ளது. திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் 28 கி.மீ தொலைவில் உள்ளது. நம்மாழ்வாரால் பாடல்பெற்றது. தங்கத்தால் இழைக்கப்பட்ட மண்டபம், தூண்கள், நகைகள் காணத் தக்கவை.
செங்கோட்டை
வட்டத் தலைநகர். மேற்கு தொடர்ச்சி மலைக் காணப்படுகிறது. தமிழ் நாட்டிலேயே சிறிய வட்டம் 194 ச.கி.மீ; இங்கு மழை அதிகம் பெறுகிறது. ஜூலை முதல் நவம்பர் வரை நிலவும் காலநிலை உடல் நலத்திற்கு ஏற்றது. இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூலபேரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முக்கியமானத் தொழில் வேளாண்மையே ஆகும். சொந்த தேவைக்கு ஆனைக் கொம்பன் நெல்லையும், விற்பனைக்குச் சிறுமணிநெல்லையும் பயிரிடுகின்றனர்.
முதல் போகத்தில் நெல்லுடன் சோளம், உளுந்தும் இரண்டாவது போகத்தில் மிளகாய், வெங்காயம் ஆகியவையும் பயிராகின்றன. மண்பாண்டம் செய்வதும், பிரம்புக் கூடைகள் தயாரிப்பதும் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகின்றன. கட்டளைமலைக் குடியிருப்பில் பாலராமவர்மா பஞ்சாலை இருக்கிறது.
செங்கோட்டை 'மண்வெட்டி' புகழ்பெற்றது. 'தோசைக்கல்' இங்கு செய்யப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பேல் கட்டப் பயன்படும் மூங்கில் பட்டைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தென்காசி
வட்டத் தலைநகர். ஏறத்தாழ 1030 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மழையளவு மிகுதி யாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இதன் தொடர்ச்சியான மலைகளும், குன்றுகளும், பாறைகளும் இவ்வட்டமெங்கும் தென்படுகின்றன. தென்காசி வட்டத்தில்தான் குற்றாலம் அமைந்துள்ளது. பொருநையும், சிற்றுறும் பாசன வசதிக்கு உதவுகின்றன. அருவியும், சாரலும் இவ்வட்டத்திற்கு கிடைத்த நன்கொடைகள்.
கி.பி. 1445 இல் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட காசி விசுவநாதர் கோவில் இங்குண்டு. பத்துக் கைககள் கொண்ட நடராசர் சிலையும், 16 கைகள் கொண்ட திருஉருவமும் இக்கோயிலில் உண்டு. இக்கோவிலில் நுண்ணிய வேலைபாடு அதிகம். இங்கு ஐப்பசி, மாசி பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வேளாண்மையும், நெசவுத் தொழிலும் நன்கு வளர்ந்து வருகின்றன. பட்டுப்பூச்சி வளர்க்கும் பண்ணை உள்ளது. சாயத்தொழிலும், நல்லெண்ணை வணிகமும், மரம் அறுக்கும் தொழிலும் நடை பெறுகின்றன. இங்குள்ள தோட்டங்களில் ரஸ்தாளி வாழப்பழம் மிகுதியாக விளைகிறது. மாம்பழ ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றும் செயல்படுகிறது.
அம்பா சமுத்திரம்
வட்டத் தலைநகர். பொதிகை மலையும், பொருநையாறும் அமைந்த வளமான ஊர். இவ்வட்டத்தின் பரப்பளவு 1280 ச.கி.மீ இரு பருவக்காற்றாலும் மழை பெறுகிறது. சில சமயம் 1500 மி.மீ. வரை பெய்வதுண்டு. இம்மாவட்டத்தின் ஆறுகள் அனைத்தும் இந்த வட்டத்தில் தான் தோன்றுகின்றன. இவ்வட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நகர அமைப்பு சிறப்பானது. இவ்வூர் செங்கோட்டை-திருநெல்வேலி இரயில் பாதையில் உள்ளது. இங்கு கல்வி, மருத்துவம், வட்ட அலுவலகங்கள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முதலியன உள்ளன.
அம்பாசமுத்திரம் 'அம்பை' என அழைக்கப்படுகிறது. இங்கு சீரான காலநிலை நிலவுவதால் உடல் நலத்திற்கு ஏற்ற ஊர். நெசவுக்கு பெயர்பெற்றது. இங்கு நெல் விளைச்சலும் மிகுதி. கேரளாவிற்கு நெல் ஏற்றுமதியாகிறது. மரவியாபாரம் சிறப்பான தொழில். குழந்தை விளையாட்டுப் பொருள்கள் செய்யப்படுகின்றன. கல்வி வளர்ச்சியில் இவ்வூர் முன்னணி வகிக்கிறது.
திருநெல்வேலி
மாவட்டத் தலைநகர் சுமார் 850 ச.கி.மீ பரப்பளவுள்ளது. மூன்று கால்வாய்களிலிருந்து நீர் பெறுகிறது. மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இந்நகர் வழியே செல்கிறது. புகைவண்டி சந்திப்பு நிலையமாக உள்ளது. மாவட்டத் தலைமை அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், கல்வி, மருத்துவம் போன்றவைகள் அமைந் துள்ளன. எல்லாவகையான பொருட்களுக்கும் சிறந்த சந்தையாக இந்நகரம் செயல் படுகிறது.
இங்குள்ள நெல்லையப்பர் கோவில் புகழ்பெற்றது. ஐவகை மன்றங்களில் இங்குள்ளது செம்பு மன்றம். நடுவில் உள்ள மணி மண்டபத்தில பெருங்கல்தூண் உள்ளன. ஒவ் வொன்றும் தனித்தனிச் சுரம் எழுப்பும் தன்மை உடையன. இங்கு வெள்ளை நந்தி உள்ளது. இக்கோவிலில் நுட்பமான வேலைகளைக் காணலாம். இறைவன் 'வேய்முத்த நாதன்'. அம்மை : காந்திமதியம்மை.
இராதாபுரம்
வட்டத் தலைநகர் 'ராஜராஜபுரம்' என்பதே ராதாபுரமாயிற்று. இதன் பரப்பளவு 1563 ச.கி.மீ. இப்பகுதிகளில் மணற்காடு மிகுதி. பொதி மாட்டின் மீதே பொருள்கள் கொண்டு சொல்லப்படுவது இன்றும் இங்கு வழக்கம். இராதாபுரம் சிவன் கோவில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. இப்படி சேரும் மஞ்சளை ஏலம் போடுவது வழக்கம்.
பாளையங்கோட்டை
நாயக்கன் காலத்தில் படைத்தலைவராக விளங்கிய அரியநாத முதலியார் கட்டிய கோட்டையில் பாளையங்கள் (படை) தங்கி இருந்தததால் இவ்வூர் பாளையங்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் நிறைய காணப்படுவதால் சின்ன ஆக்ஸ்போட் என்றும் அழைக்கப்படுகிறது. சேசு சபையினர் நடத்தும் புனித சவேரியார் கல்லூரி புகழ் பெற்றதாகும். இங்கு நிறைய கிருத்துவக் கோயில்கள் உள்ளன. இங்கிலீஸ் சர்ச், பிரான்சிஸ் தேவாலயம், செயின்ட் அந்தோணி ஆப் பாதுரா முதலியவை முக்கியமானவை. பாளையங்கோட்டையும், திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாகும்.
சீவலப்பேரி
இங்கு சிற்றாறு, கயத்தாறு, பொருநை என்ற மூவாறுகளும் கூடுவதால் முக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை, ஆவணி மாதங்களில் மாட்டுச் சந்தை நடைபெறும்.
தச்சநல்லூர்
திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ வடக்கே உள்ளது. பித்தளைப் பாத்திரத் தொழில் முக்கியமானது. இரண்டு நூலாலைகளும் மின்சார மோட்டார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற் கூடமும் சர்க்கரை ஆலையும் இங்கு உள்ளன.
சிவசைலம்
இங்கு ஒளவை ஆஸ்ரமமும், லட்சுமி ஆதார ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் உள்ளன.
சங்கர் நகர்
இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையும், தொழில் கல்லூரியும் உள்ளன. மத்தளம் பாறை : தென்காசியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. மாம்பழ வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது.
பண்பொழி
இதன் பெயர் பைம்பொழில். தென்காசிக்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை அழகுடன் செறிந்த காடுகளைக் கொண்டது. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சித்த வைத்திய மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன. தேங்காய் வியாபாரத்திற்கு ஏற்ற இடம். இக்குன்றின் மீது முருகனுக்கு கோவில் உளளது. 600 படிகள் ஏறிச் சென்று முருகனைத் தரிசிக்கலாம்.
வடகரை
தென்காசியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. நெல், தென்னைக்குப் பெயர் பெற்றது. பீடித்தொழில் இங்கு குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது.
காரையிருப்பு
அரசாங்க விதைப்பண்ணை உள்ளது.
கடையம்
தென்காசியிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஜம்பு நதிக்கரையில் இருக்கிறது. கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர் இது. திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. பன்னீர் வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. ரோஜாப்பூ, தாழம்பூ, நார்த்தம் பழம் முதலியவை வெளியூர்களுக்குச் செல்கிறது.
கடைய நல்லூர்
கடைய நல்லூர் 3 பகுதிகளைக் கொண்டது. மேல், கீழ்கடைய நல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் என்பதே அது. இங்கு வியாழக் கிழமை சந்தை. முக்கியத் தொழில் நெசவு. துணிகளுக்கு பளபளப்பேற்றும் காலண்டரிங் ஆலை இங்கு உள்ளது.
கோட்டை மலை
வாசுதேவ நல்லூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றுலாப்பயணத்திற்கு ஏற்ற இடம். இங்குள்ள காடுகளில் மூங்கிலும் பிரம்பும் அதிகம்.
தலைவன் கோட்டை
முள்ளிக் குளத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு முக்கிய விளை பொருள் தக்காளி, வெண்டைக்காய்.
திருமாலபுரம்
சுற்றுலாத் தலம். கடைய நல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது. முற்கால பாண்டியர்கள் அமைத்த குடை வரைக் கோயிலில் பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. 45மீ உயரமுள்ள இம்மலையின் உச்சியில் ஊற்றும் கத்தோலிக்கத் கோயிலும் உண்டு.
புளியங்குடி
பாம்புக் கோயில் இரயிலடியிலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி வேட்டி சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. கருங்கண்ணி பருத்தி விளைச்சல் அதிகம்.
சேரன் மாதேவி
திருநெல்வேலியிலிருந்து 26கி.மீ தொலைவில் உள்ளது. பழைய கோவில் உண்டு. இவ்வூரில் நெசவுத் தொழில், மண்பாண்டத் தொழில், கொழுந்து மலையில் மூலிகை எடுக்கும் தொழில், ஓடு செய்யும் தொழில், உரத்தொழில் இவற்றுடன் வேளாண்மையும் சிறந்து விளங்குகிறது.
குருவிக்குளம்
இங்கு பருத்தி, கம்பு, வாழை ஆகியவை முக்கியமானவை. கதர் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. குயவர், கம்மார் கூட்டுறவு முறையில் சிறந்த பயனைப் பெற்றுள்ளனர்.
வன்னிக்கோநேந்தல்
பழத் தோட்டங்கள் அதிகம். குறிப்பாக எலுமிச்சை. வாசுதேவ நல்லூர் : புளியங்குடிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. புலித்தேவரின் கோட்டை இருந்து அழிவுற்றது. ஊரருகே அடர்த்தியான காடு இருக்கிறது.
சிவகிரி
குற்றாலம் செல்லும் சாலையில் உள்ளது. நெல்விளையும் வளமான ஊர். 'குட்டி மலையாளம்' என்று அழைப்பார்கள். இங்கு மாம்பழ விளைச்சல் அதிகம். சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது. பீடித்தொழில், லித்தோ அச்சகங்கள் உள்ளன. 'முக்கூடற்பள்ளு' என்ற புகழ்பெற்ற பள்ளு இலக்கியம் இவ்வூரைப் பற்றிப் பேசுகிறது.
செண்பகராமன் நல்லூர்
நாங்குநேரிக்குக் கிழக்கே ஆறு கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் வெளிப் பிரகாரத்தின் வடக்கு வரிசையில், வடக்குத் தூணில் இரு துவாரங்கள் உள்ளன. ஒன்றில் ஊதினால் எக்காள ஒலியும், மற்றொன்றில் சங்கொலியும் கேட்கும் வண்ணம் செய்துள்ளனர்.
கருவேலங்குளம்
களக்காட்டிலிருந்து 1 1/2 கி.மீ தொலைவிலுள்ளது. புகழ்பெற்ற நடராசர் உருவம் இக்கோயில் உள்ளது. ஏழிசையும் ஒலிக்கும் தூண்கள் இங்குண்டு. மகாமண்டபத்தில் உள்ள கனமற்ற விநாயகரைத் தூக்கினால் கீழே ஓர் அறையைக் காணலாம்.
பிரம்ம தேசம்
ஊரின் நடுவில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்குக் கல்லினால் அமைந்த கூரையும், நான்கு கண்ணிகளுடன் கூடிய கற்சங்கிலியில் தொங்கும் கல்மணியும், ஒரு பாதி யானையாகவும், ஒரு பாதி சிங்கமாகவும் உள்ள பெரிய யாளியின் வாயில் உருளும் கல்லுருண்டை வெளியே எடுக்கமுடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரு குரங்குகளின் உருவங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
கோயில் பத்து
சிவன் கோயிலின் கிழக்கே நின்று பார்த்தால் சுவரில் ஒரு கதவு தெரியும். அதைத் தள்ளி விட்டு அதனுள் பலர் நின்று கொள்ள முடியும்.