குஷிப்படுத்தும் முதலை பண்ணை சிறுவர் பூங்காவும் உருவாகிறது
சுற்றுலா தலமாக மாறி வரும் உடுமலை பகுதியில், சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழும் வகையில், முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வோமா!உடுமலை, அமராவதி அணை அருகே, வனத்துறை சார்பில், ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த, நன்னீர் முதலைகள் வசிக்கும் பண்ணை உள்ளது. கடந்த 1976ம் ஆண்டு துவக்கப்பட்ட, இந்த முதலை பண்ணை, 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குட்டிகள் முதல், 60 ஆண்டு வயது வரை ஆன, 101 முதலைகள், 10 தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இயற்கைச்சூழலில், தொட்டியில் வைத்து வளர்க்கப்பட்டு வரும், இப்பண்ணையை பார்வையிட, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.தொடர் பராமரிப்பு இல்லாமல், முதலைப்பண்ணை அலங்கோலமாக மாறி வந்த நிலையில், தற்போது அதனை மேம்படுத்தும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.இந்த வளாகத்தில் சிறுவர்கள் விளையாடும் வகையில், பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்கப்படுகிறது. சிறிய அளவில் உள்ள, நீர் செல்லும் கால்வாய் மீது, இரு இடங்களில் அழகான வடிவமைப்பில் பாலம், சிறுத்தை, யானை, முதலை, குரங்கு என தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பொம்மைகள், இருக்கை வசதியுடன் அமைக்கப்படுகிறது.மேலும், பெரிய அளவிலான முதலைகள், வட்ட வடிவமாக உள்ள தொட்டியில் விடப்பட்டுள்ளது. ஆபத்து ஏற்படாத வகையில், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பகுதியில் மட்டுமே தற்போது பார்க்க முடியும்.சுற்றிலும் நின்று பார்க்கும் வகையில், வசதிகள், பேவர் பிளாக் கற்கள் பதித்து தளம் அமைக்கப்படுகிறது. மேலும், முதலை வாயை திறந்து இருக்கும் நிலையில், பெரிய அளவிலான வளைவு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.வனத்துறையினர் கூறியதாவது:அமராவதி முதலை பண்ணை மேம்படுத்தும் பணி துவங்கியுள்ளது. சிற்ப கலை நிபுணர்கள் மூலம், வன விலங்கு பொம்மைகள், அலங்கார வளைவு, சிறுவர் பூங்கா என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மாற்றி அமைக்கப்பட உள்ளது.மேலும், முதலை முட்டையிடுவது முதல் வளர் பருவம், நமது பகுதியில் சிறப்பு வாய்த்த முதலைகளின் வாழ்வியல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெறும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். தற்போது பணி துவங்கி நடந்து வருகிறது.இவ்வாறு, வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலா தலமாக மாறி வரும் உடுமலை பகுதியில், சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழும் வகையில், முதலைப்பண்ணை அமைந்துள்ளது. இதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வோமா!உடுமலை, அமராவதி அணை அருகே, வனத்துறை ...
www.dinamalar.com