சீரமைப்பு!
மேட்டுப்பாளையம் : சூழல் சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் பரளிக்காட்டில் உள்ள பரிசல்களையும், சமையல் கூடத்தையும் சீரமைக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம், சுற்றுலா பயணிகள் கொரோனா பரவல் தடுப்பு அம்சங்களை பின்பற்றி ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே குதுாகலத்தை தொடரமுடியும்.காரமடை அடுத்த, பில்லுார் அணை அருகே பரளிக்காட்டில், கோவை மாவட்ட வனத்துறை, சூழல் சுற்றுலா தலம் அமைத்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பில்லுார் அணை நீரில், பரிசல்கள் வாயிலாக, இயற்கை காட்சிகளை சுற்றி காண்பிக்கப்படும். அதன்பின்பு மலைவாழ் மகளிர் குழு அமைப்பினர், சமைத்து உணவு வழங்குகின்றனர். பின்பு வனப்பகுதியில் நடைபயிற்சியும், அத்திக்கடவு ஆற்றில் குளிக்கவும் அனுமதிக்கின்றனர்.
பரளிக்காடு சூழல் சுற்றுலாவில், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும், சுற்றுலா பயணிகள் அனுமதித்து வந்தனர். இதற்கு கட்டணமாக, பெரியவர்களுக்கு, 500 ரூபாயும், சிறியவர்களுக்கு, 400 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு, 120 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பிரச்னையால் கடந்த, 11 மாதங்களாக சூழல் சுற்றுலா தலம் மூடப்பட்டு இருந்தது.இந்நிலையில் இதை திறக்க, மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. காரமடை வனத்துறையினர் படகுகளுக்கு பெயின்ட் அடித்தும், சமையல் கூடத்தை சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால், காரமடை அடுத்த பரளிக்காடு சூழல் சுற்றுலா தலம், விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து,காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறுகையில்,''கொரோனா தொற்று காரணமாக பில்லுார் அணை அருகே பரளிக்காட்டில் உள்ள சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு வந்ததை அடுத்து, மாவட்ட வனத்துறையினர் சூழல் சுற்றுலா மையத்தை திறக்க உத்தேசித்துள்ளது. இதற்காக அனைத்து பரிசல்களும் தயார் நிலையில் வைக்கும் விதமாக பெயின்ட் அடித்தும், சமையல் கூடம் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
விரைவில் சூழல் சுற்றுலா திறக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு திறக்கும் பட்சத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு அம்சங்களை பின்பற்ற அறிவுறுத்தப்படும்,'' என்றார்.
மேட்டுப்பாளையம் : சூழல் சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் பரளிக்காட்டில் உள்ள பரிசல்களையும், சமையல் கூடத்தையும் சீரமைக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ...
www.dinamalar.com